Sunday, November 25, 2007

தீபாவளி திருநாள்

தீபாளிகாயா


நம் பாரத நாட்டில் கொண்டாடப்பட்டுவரும் பண்டிகைகளில் மிக
பிரபலமாகக் கொண்டாடப்படுவது "தீபாவளி" பண்டிகையாகும்.
இந்திய மதத்தினர் அனைவரும் இப்பண்டிகையைக் கொண்டாடி
வருகின்றனர். தற்போது, இந்தப் பண்டிகையை பிற நாடுகளும்
அங்கீகரித்து வருவதால், இது உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு
வரும் பண்டிகையாக மாறிவருகிறது.


தீபாவளி:

தீபாவளி = தீபம் + ஆவளி. தீபங்களின் வரிசை என்று பொருள்.
தீபாவளி ஏன் கொண்டாடப்படுகின்றது? அதற்கு காரணம் என்ன?
ஏன் வரிசையாக தீபம் ஏற்றி வைக்கிறார்கள் என்பதனை
இக்கட்டுரையின் மூலம் மிகச் சுருக்கமாகப் பார்க்கலாம்.


இந்தியாவில் தோன்றியச் சமயங்கள் அனைத்தும் இப்பண்டிகையைக்
கொண்டாடி வருகின்றன என்பதை முன்னமே பார்த்தோம். ஒவ்வொரு
இந்தியச் சமயங்களும் இப்பண்டிகையை ஒற்றுமையாகக் கொண்டாடி
வந்தபோதும் அதற்கு அவைகள் சொன்ன காரணங்கள் - வெவ்வேறாக
இருக்கின்றன. ஏன் இந்த முரண்பாடுகள்? ஏதாவது ஒன்றுதானே
சரியான காரணமாக இருக்க முடியும்? இந்த கேள்வி எனக்கு மட்டுமல்ல
பலருக்கும் தோன்றியிருக்கக் கூடும்? இல்லையா! அந்த கேள்விக்கு
விடைக்காண முயற்சிப்பதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம்.



மற்ற மதங்களில் தீபாவளி:

தற்போது, இந்தியாவில் பெரும்பான்மையினர் இந்துக்களாக இருப்பதால்,
இப்பண்டிகை இப்போது இந்துக்கள் பண்டிகையாகவே
கொண்டாடப்பட்டுவருகிறது. அதற்கு அவர்கள் சொல்லும் காரணங்களை
ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்?


ஒன்றாவது காரணம்:

தீபாவளி ஏன் கொண்டாடப்படுகிறது? என்று தமிழ்நாட்டு இந்துக்களை
கேட்டால், அவர்கள் பெரும்பாலோர் சொல்லும் முதல் காரணம் இந்த
பதிலாகத்தான் இருக்கும். அந்நாளில்தான் கிருஷ்ணர், நரகாசூரனை
வதம் செய்தார் என்றும் அவன் இறந்த இந்த நாளை மக்கள் அனைவரும்
தீபாவளியாகக் கொண்டாடி வருகின்றனர் என்பார்கள். இந்த கதை
வடநாட்டில் வழங்கிவருகிறதா? என்பது சந்தேகமே. இந்தக் கதை
தமிழ்நாட்டில் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
என்னங்கேறன்? ;-)


இரண்டாவது காரணம்:

கொஞ்சம் படித்தவர்களைக் கேட்டால் [ ;-)] இந்த நாளில், இராமர்
வனவாசம் முடித்து அயோத்தி திரும்பியதால், அயோத்தி மக்கள்
அனைவரும் தீபம் ஏற்றிக் கொண்டாடினர் என்பார்கள். இந்த காரணம்
வலுவானதாக இல்லை. இராமர் வனவாசக் காலத்தில் அவனுடைய
தம்பி பரதன் அயோத்தியை ஆண்டு வந்தான். ஒரு வேளை
பரதனுடைய ஆட்சி அவ்வளவு மோசமானதாக இருந்திருக்குமோ?
சும்மா ஒரு விளையாட்டிற்காகதான்! :-)

சரி. வால்மீகி இராமயணத்தில் இச்செய்தி வருவதாக சொல்கிறார்கள்?
அன்பர்கள் யாராவது வால்மீகியில் எந்த இடத்தில், எத்தனையாவது
ஸ்லோகத்தில் இச்செய்தி சொல்லப்பட்டு வருகிறது என்பதை குறிப்பிட்டு
சொல்ல முடியுமா? அல்லது ஏதாவது வலைச்சுட்டி? இராமயணத்தில்
"தீபாவளி" என்ற சொற்றொடர் ஆண்டு வருகிறதா? வால்மீகியைத் தழுவி
எழுந்த அல்லது எழுதப்பட்ட அனைத்து இராமாயணங்களிலும்
இச்செய்திச் சொல்லப்பட்டு இருக்கின்றனவா? போன்ற கேள்விகளுக்கு
விடைக் காணவேண்டும்!


மூன்றாவது காரணம்:

இன்னும் சிலர் மகாபலி, கீழ் உலகத்தில் இருந்து, கிருஷ்ணன்பகவான்
ஆணைப்படி பூமிக்கு வந்த நாள் என்று கதை சொல்வார்கள்.



காரணம் நான்கு:

சைவர்கள், சிவபெருமான், "அர்த்தநாரீஸ்வரராக' அன்றைய நாளில்
காட்சியளித்ததாக கூறுவார்கள்.


இன்னும் நிறையக் காரணங்கள் கூறப்பட்டாலும் ஏதாவது ஒன்றுதானே
தீபாவளிக் கொண்டாடுவதற்கு காரணமாக இருக்கு முடியும்.

மேலும், மேலே கூறப்பட்ட காரணங்களில் எந்த ஒரு காரணத்திற்காக
இந்துக்கள் தீபாவளி கொண்டாடு வருகின்றனர் என்பதை அவர்களே
தெளிவாகச் முடிவு செய்துக் சொல்லட்டும்.

இவ்வளவும் ஒரே ஒரு உண்மையை மறைக்க சொல்லப்பட்ட
கட்டுக்கதைகள் என்பதுதான் நிதர்சணம். அந்த உண்மைதான் என்ன?



மகாவீரர் பரிநிர்வாண நாள்:

சமணர்களின் கடைசி தீர்த்தங்கரர் பகவான் வர்த்தமான மகாவீரர்.
அந்த நாளில் தான் வீடுபேறு அடைந்தார். அந்த நாளை சமண
மக்கள் யாவரும், அரசன் ஆணைப்படி, வீடுகளில் தீபங்களை ஏற்றி
வைத்தார்கள். அந்நந்நாளே இன்றுவரை அனைவராலும்
கொண்டாடப்பட்டு வருகிறது. அந்நாளில் பட்டாசுகள் வெடிப்பதுப்
போன்ற சம்பிரதாயங்கள், எல்லாம் பின் நாளில் ஏற்பட்ட வழக்கங்கள்.

சமணர்களின் திருநாளை ஏன் இந்துக்களும் கொண்டாட வேண்டும்
என்ற கேள்வி எழலாம்? அதற்கு யான் சொல்லும் சமாதானம்
இதுவே. ஒரு காலத்தில், இந்திய தேசம் முழுதும் சமண மதமே
பரவியிருந்தது. பாரத மக்கள் அனைவரும் சமணர்களாகவே
இருந்தார்கள். பின் காலம் செல்ல, செல்ல இந்து மதத்தின்
ஆதிக்கத்தினால் மக்கள் இந்து மதங்களுக்கு மாறத் தொடங்கினர்.
அப்படி மாறிய மக்களுக்கு அந்த திருநாளைக் கொண்டாட இந்து
மதத்தில் ஏதாவது ஒரு காரணம் சொல்லப்பட வேண்டும் இல்லையா?
அப்படி சொல்லப்பட்டவைத்தான் மேலே கூறப்பட்ட காரணங்கள்.


இலக்கிய ஆதாரங்கள்:

சமண இலக்கியத்தில் 'தீபாவளி'

பாரத இலக்கிய வரலாற்றில் "தீபாவளி" என்ற சொற்றோடர் சமண
இலக்கியங்களில் தான் முதன் முதலாக வழங்கி வந்திருக்கிறது.
ஆச்சாரியர் பத்ரபாகு முனிவர் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில்
வாழ்ந்த சமண முனிவர். அந்த முனிவரால் என்பவரால் எழுதப்பட்ட
"கல்ப சூத்திரம்' என்னும் பிராகிருத நூலில் பின்வருமாறு
கூறப்பட்டிருக்கிறது.

"மகாவீரர்" என்ற ஞான ஒளி மறைந்துவிட்டதால், தீப
விளக்கையாவது ஏற்றி வைப்போம்" என்று காசி, கோச மக்களும்,
பதினாறு கண அரச மக்களும், தங்கள் வீடுகளின் முன் தீபம்
ஏற்றி வைத்தார்கள்".


மற்றும், கி.பி. ஆறாம் நூற்றாண்டில், ஆச்சாரியர் ஜினசேன
முனிவர் என்பவரால் எழுதப்பட்ட "ஹரிவம்ச புராணம்" என்ற
நூலில் பின் வருமாறு கூறப்பட்டிருக்கிறது.

"கடவுளர்கள் அந்நாளில் விளக்குகளை வரிசையாக
ஏற்றி வைத்து அவருடைய மோட்சத்தை நினைவுப்படுத்தினார்கள்.
அன்றிலிருந்து பாரத மக்களும் அந்நாளில் தீபங்களை
வரிசையாக ஏற்றி வைத்து கொண்டாடி வரலானார்கள்".

"தீபாளிகாயா" என்ற சொல்லும் அந்நூலில்தான் முதன்
முதலில் பயின்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. "தீபாளிகாயா'
என்றால் "ஞான தீபம் உடலை நீங்குகிறது" என்று பொருள்.
அச்சொல்லில் இருந்து வந்ததுதான் இன்று அழைக்கப்படும் "தீபாவளி"
என்ற திருநாள்.

http://www.cs.colostate.edu/~malaiya/diwali.html
http://en.wikipedia.org/wiki/Diwali

மகாவீரர் இறந்த நாளை ஏன் மக்கள் கொண்டாடவேண்டும்? என்ற
கேள்வியும் எழத்தானே செய்யும்? சமண தீர்த்தங்கரர்கள் வாழ்க்கையில்
"பஞ்ச கல்யாணங்கள்" சிறப்பாகாகப் போற்றப்படுகிறது. தமிழில்
ஐம்பெரும் கலியாணங்கள்" என்று அழைப்பார்கள். இதைப்பற்றி
தனிக் கட்டுரையாக எழுத உள்ளேன். அங்கு படித்துக் கொள்க.
இந்த ஐந்து கல்யாணங்களில் கடைசியாகக் கொண்டாடப்படுவது
தான் 'பரிநிர்வாண கல்யாணம்". மகாவீரர் வீடுபேறடைந்த நாள்.
உயிர்களின் கடைசி நிலை "வீடுபேறு". அதனால், சமணர்கள்
தீர்த்தங்கரர்களின் பிறந்த நாளைவிட அவர்கள் மோட்ச நாளையே
சிறப்பாகக் கொண்டாடுவார்கள். "சிவராத்திரியும்" அவ்வாறே! ;-)


உண்மைத் திருநாள்:

அத்திருநாளில், பகவான் வர்த்தமான மகாவீரரை நினைத்து அவர்
வழிநடப்போம். அவர் வழிப் + படுவோம். அந்நாளில் இரப்பாருக்கு
கொடுப்போம். மற்ற உயிர்களுக்கு அச்சம் ஏற்படாதிருக்க "பட்டாசு
வெடிகளை" தவிர்ப்போம்.

அறம் மறவற்க! அறமல்லது துணையில்லை!!



இரா.பானுகுமார்,
சென்னை

2 comments:

குருத்து said...

தீபாவளி - தமிழர்களின் திருவிழா அல்ல! 'இந்துக்களின்' திருவிழா.

பிராமணிய மதத்தின் எதிரியான சமண மதத்தின் மகாவீரர் இறந்ததை தான், நரகாசுரன் அழிந்ததாக கொண்டாடப்படுகிறது என வரலாற்று வழி ஆதாரங்கள் மற்றும் மரபு வழிப்பட்டும் விளக்குகிறார்

- பண்பாட்டு துறை ஆய்வாளர் தொ. பரமசிவன், இவர் மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணிபுரிந்தார், பிறகு, திருநெல்வேலியில் உள்ள மனோன்மனியம் சுந்தரனார் பல்கலை கழகத்தின் தமிழ்த்துறை பேராசிரியராகவும், பதிவாளராகவும் இருந்து ஓய்வு பெற்றிருக்கிறார். (தற்பொழுது எதுவும் பணியில் இருக்கிறாரா என தெரிந்தவர்கள் தெரியப்படுத்தவும்)

****

தீபாவளி

இன்று தமிழ்நாட்டில் விறுவிறுப்பாகக் கொண்டாடப்பெறும் திருவிழா தீபாவளி. நகர்ப்புறம் சார்ந்ததாகவும், துணி, என்ணெய், மாவு, பட்டாசு ஆகிய பெருந்தொழில்களின் பொருளாதாரம் சார்ந்ததாகவும் இத்திருவிழா கொண்டாடப்படுகிறது. தகவல் தொடர்புச் சாதனங்கள் தரும் பகட்டான விளம்பரங்களால், இது தமிழர்களின் 'தேசிய திருவிழா' போலக் காட்டப்படுகிறது. ஆயினும் தைப்பொங்கல் திருவிழா போல மரபுவழிப் பொருளாதாரம் சார்ந்ததாகவும் ஒரு திருவிழாவிற்குரிய உள்ளார்ந்த மகிழ்ச்சியோடும் சடங்குகளோடும் கொண்டாடப் பெறுவதாகவும் தீபாவளி அமையவில்லை. தைப்பொங்கல் சமய எல்லையினைக் கடந்து நிற்கும் திருவிழா. இது பழந்தமிழரின் அறுவடைத் திருவிழா. எனவே தான் இன்று ரோமன் கத்தோலிக்கத் தேவாலயங்களில் கூடத் தைப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. ஆனால் தீபாவளி தமிழரின் திருவிழாவாக அமையாமல் 'இந்து'க்களின் திருவிழாவாக அமைகிறது.

தமிழர் திருவிழா - இந்துக்களின் திருவிழா என்ற வேறுபாட்டினை எவ்வாறு பிரித்தறிவது? பழைய வழிபாட்டு முறைகளோடு கூடிய தொல் சமய வழிபாடுகள், இவற்றின் சாரத்தையும் உள்வாங்கிக் கொண்டு வளர்ந்த சைவம், வைணவம் ஆகியவையே தமிழர்கைன் பழைய மதங்களாகும். இவை காட்டும் திருவிழாக்களான கார்த்திகைத் திருவிழா, திருவாதிரைத் திருவிழா, தைப்பூசத் திருவிழா, மாசிக்களரி எனப்படும் சிவராத்திரித் திருவிழா, பங்குனி உத்திரம், சித்திரைப் பிறப்பு, வைகாசி விசாகம், ஆடிப் பதினெட்டாம் பெருக்கு ஆகியன சைவமும் வைணவமும் பெருஞ்சமயங்களாக நிலைபெறுவதற்கு முன்னரே தமிழர்கள் கொண்டாடிய திருவிழாக்களாகும். பக்தி இயக்கத்தின் வளர்ச்சியில் இவை சைவ வைணவ மதங்களாலும் அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டன.

தீபாவளி, தமிழ்நாட்டின் மரபுவழிப் பொருளாதாரத்தோடும் பருவ நிலைகளோடும் சடங்குகளோடும் தொடர்பில்லாத ஒரு திருவிழா. பார்ப்பனியத்தின் பாதிப்புகளில் இருந்து இன்னமும் விலகி நிற்கிற சிற்றூர்களில் தீபாவளி கொண்டாடப்படுவதில்லை. தீபாவளியின் அடையாளமான வெடி, அதன் மூலப்பொருளான வெடிமருந்து ஆகியவை தமிழ்நாட்டிற்குப் பதினைந்தாம் நூற்றாண்டு வரை அறிமுகமாகவில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். விளக்குகளின் வரிசை எனப் பொருள்படும் தீபாவளி (தீப+ஆவளீ) என்னும் வட சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல்லும் புழக்கத்தில் இல்லை. தமிழர்களின் விளக்குத் திருவிழா என்பது திருகார்த்திகைத் திருவிழாவே.

நரகாசுரன் என்னும் அரக்கன் கிருஷ்ணனால் அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் தீபாவளிக் கதை திராவிடப் பண்பாட்டோடு தொடர்புடையதன்று. மாறாக பிராமணிய மதத்தின் சார்பாக எழுந்த கதையாகும். இந்த நாளே பிராமணிய மதத்தின் எதிரியான சமண மதத்தின் இருபத்து நாலாம்
தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் வீடுபேறடைந்த (இறந்த) நாளாகும். தான் இறந்த நாளை வரிசையாகத் தீபங்களை ஏற்றிக் கொண்டாடுமாறு மகாவீரர் தம் மதத்தவரைக் கேட்டுகொண்டார். ஆகவே, பிராமணீய மதத்தின் பழைய எதிரிகளான சமணர்களும் தீபாவளியைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். எனவே நரகாசுரன் அழிந்ததாக பிராமணியத் தீபாவளிக் கதைகள் குறிப்பிடுவது மாகாவீரர் இறந்த நாளையே அக்கும். விசயநகரப் பேரரசான, 'இந்து சம்ராஜ்ஜியம்', தமிழ்நாட்டில் நுழைந்த கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டு தொடங்கியே தீபாவளி இங்கு ஒரு திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.

இந்தக் காரணம் பற்றியே தமிழ்ப் பிராமணர்களைவிட, தமிழ்நாட்டில் உள்ள தெலுங்குப் பிராமணர்களே தீபாவளியைப் 'பக்தி சிரத்தை'யுடன் கொண்டாடுகின்றனர். வடநாட்டு இந்துக்களிடமும் சமணர்களிடமும் இல்லாதபடி தமிழ்நாட்டில் இத்திருவிழா நாளன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கின்றனர். எண்ணெய் தேய்த்துக் குளித்தல் என்பது தமிழ்நாட்டில் நீத்தார் நினைவில் இறுதி நாளைக் குறிக்கும் சடங்காகும். தமிழ்நாட்டுப் பிராமணர்களும் இத்திருவிழாவை இறந்தார் இறுதிச் சடங்கு போல 'கங்கா ஸ்நானம்' செய்து கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது. ஆகவே உண்மையில் இத்திருவிழா பார்ப்பனிய மதத்தின் திருவிழாவேயன்றித் தமிழர் திருவிழா ஆகாது.

'நரகனைக் கொன்ற நாள் நல்ல நாள் விழாவா' என்று பாரதி தாசன் பாடுவதும் இங்கே நினைவுக்குரியது.

- தொ.பரமசிவன் எழுதிய பண்பாட்டு அசைவுகள்' லிருந்து. பக்.58, 59


http://socratesjr2007.blogspot.com

Anonymous said...

Тhank you for the good writeup. It if truth be told wɑs
once a amusement account it. Glance complex to far delivered agreeable from yοu!
Ꮋowever, h᧐w could ѡe communicate?